Home  |  About Us  |  Services  |  Sitemap  |  Contact Us  
History of the Church
About Diocese
Parish Priests Directory
Services at Kurusady
Institutes & Convents
Catechism Online Quiz
Holy Mass timings: Sunday - 6.30am & 5.00pm; Monday - 6.00am; Tuesday - 5.30pm; Wednesday - 6.00am; Thursday - 6.00am; Friday - 6.00am; Saturday - 6.00am.
 

Article


திருத்தூதர் தூய பவுலின் நற்செய்திப் பயணங்கள்

தமஸ்கு நிகழ்விற்கு முன்

திருத்தூதர் பவுலை பற்றிய வரலாற்றுக் கருத்துக்கள்

பவுல் ஒரு யூதன்; சிசிலியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவர். யூத பாரம்பரியங்களை, மரபுகளை நன்கு அறிந்திருந்தவர். புகழ் பெற்ற கமாலியேல் என்னும் திருச்சட்ட அறிஞரிடம் திருச்சட்டங்களை நுட்பமாக கற்றவர். இப்பேற்பட்ட உயர்ந்த எண்ணங்களை கொண்ட தூய பவுல் திருத்தூதர்களில் முதன்மையானவராகவும் முன்னோடியாகவும் கருதப்படுபவர். திருச்சபையின் இருபெரும் தூண்களில் இவரும் ஒருவர் என்பது இவருக்குக் கிடைத்த தனிச்சிறப்பு. உயரிய பரம்பரையில் உருவாகிய இவர் கிறிஸ்துவுக்கு அதிகமாகச் சோதனைகளையும், வேதனைகளையும் கொடுத்தவர். இயேசுவையும் அவரை பின்பற்றிய மக்களையும் வீழ்த்துவதில் மிக தீவிரமாக செயல்பட்ட இவரும் ஒரு காலகட்டத்தில் இயேசுவால் ஆட்கொள்ளப்பட்டார். “சவுலே சவுலே ஏன் என்னை துன்புறுத்துகிறாய்? நீ துன்புறுத்துகிற இயேசு நானே” என்ற குரலை கேட்டு நிரந்தரமாக கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க தீவிரமாக பயணம் மேற்கொண்டார். எவ்வளவுக்கு எவ்வளவு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை சாகும் வரை துன்புறுத்தி வந்தாரோ, கிறிஸ்தவர்களை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் என்பதற்காக அனுமதி கடிதம் பெற்று வந்தாரோ அதைவிடவும் மிக தீவிரமாக தனது இயேசு அனுபவத்திற்குப் பிறகு சாகும் வரை நற்செய்தியை அறிவித்து வந்தார்.

 

பவுல் கிறிஸ்த்தவர்களை ஏன் துன்புறுத்தினார்?
• யூதர்களுக்கு இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருந்தது அல்லது விருப்பமில்லை.

• இயேசுவின் பிறப்பும் வாழ்வும் பணிகளும் அவரது இறப்பும் யூதர்களின் “மெசியா” குறித்த எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு இருந்தன.

• இயேசுவின் பிறப்பை பொறுத்தமட்டில் நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ? (யோவான் 1:45-46) என்ற சந்தேகம் இருந்தது.

• முக்கியமாக இயேசுவின் கோட்பாடுகள் யூத மதப் பாரம்பரியங்களையும் நெறிமுறைகளையும் சீர்;குலைக்கக்கூடும் என யூதர்கள் அஞ்சினர்.

• இயேசுவின் சாவைப் பொறுத்தவரையில் மெசியா சிலுவையில் அறையப்படுவதை யூதர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் சிலுவையைத் தடைக்கல்லாக அல்லது சாபத்தின் சின்னமாக பார்த்தனர்; எனவே மெசியா சிலுவையில் கொல்லப்பட்டார் என்று பறைசாற்றியதை யூதர்கள் இறைவனை பழித்துரைப்பதாகவும், அங்ஙனம் பழிப்பது மரணதண்டனை வழங்கப்படுவதற்குரிய குற்றமாகவும் பார்த்தனர். (லேவியர் 24: 1-6)

• யூதர்கள் திருச்சட்டத்தை இதயமாக மதித்தனர். பவுலும் உரோமையருக்கு எழுதிய மடலில், திருச்சட்டம் நீதியானது (உரோமையர் 7:12), ஆவிக்குரியது (உரோமையர் 7:14), நல்லது (உரோமையர் 7:16), ஞானமும் உண்மையும் கொண்டது (உரோமையர் 2:9) என்கிறார்.

• திருச்சட்டத்தை கடைபிடிப்பதால் மட்டுமே மீட்பு உண்டு என்பதை யூதர்கள் ஆழமாக நம்பினர். ஆனால் இயேசுவைப் பின்தொடர்ந்த, கிரேக்கப் பண்பாட்டை உள்வாங்கிய கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்திற்கு அப்பாற்பட்டு மீட்பு (நம்பிக்கையால்) கிடைக்கும் என நினைத்ததைப் பவுலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
• கிறிஸ்தவர்களின் கோட்பாடுகளைக் கவனித்த யூதர்கள், கிறிஸ்தவர்களைப் பிரிவினைவாதிகளாகவும் கிளர்ச்சியாளர்களாகவும் தப்பறைக் கொள்கைகளைக் கடைப்பிடிப்வர்களாகவும் கருதியதால், அவர்களை முற்றிலும் அழித்துவிடவேண்டும் என்கிற வெறியோடு செயல்பட்டார்கள். (தி.ப 8:1) (தி.ப. 22:4)

 

மனமாற்றம்
சில வாழ்க்கை அனுபவங்கள் சிலநேரம் சில மனிதர்களை அவர்களது பாவ வாழ்விலிருந்து மனமாற்றம் பெற்று புதிய வாழ்விற்கு அழைத்துச் செல்கிறது. ஆண்டவர் மனிதரின் குணநலன்களையோ, ஆற்றலையோ, உயரத்தையோ, உடல் பலத்தையோ, பேச்சாற்றலையோ, அறிவுத்திறனை கொண்டோ மனிதர்களை தமது இறையாட்சிப் பணிக்கு அழைக்கவில்லை மாறாக அம்மனிதர் மீதுள்ள நம்பிக்கையை வைத்துதான் இப்பணிக்கு அழைத்துள்ளார்.

எ.கா:
• லொயோலா இஞ்ஞாசியாரின் போர்கள் அனுபவம் அவரை பிற்காலத்தில் ஒரு புனிதராக மாற்றியது.

• லொயோலா இஞ்ஞாசியார் சொன்ன இறைவார்த்தை (மத்தேயு 16:26) பிற்காலத்தில் சவேரியாரை புனித பிரான்சிஸ்கு சவேரியாராக மாற்றியது.

• தெற்கு ஆப்பிரிக்கா இரயில் பயணத்தில் காந்தியடிகளுக்கு கிடைத்த அனுபவம் பிற்காலத்தில் அவரை இந்திய தேசத்திற்கு மகாத்மாவாக அல்லது தேசத்தந்தையாக மாற்றியது.

• கொல்கொத்தா - டார்ஜிலிங் இரயில் பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவம் சாதாரண அருட்சகோதரியாக இருந்த ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியுவை பிற்காலத்தில் புனித அன்னை தெரசாவாக மாற்றியது.

• கறுப்பு இன மனிதரை சந்தையில் ஏலம் இடும் காட்சியை நேரில் பார்த்த அனுபவம் பிற்காலத்தில் ஆபிரகாம் லிங்கனை அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக மாற்றியது.

• உலகபோக்கின்படி வாழ்ந்த அகுஸ்தினாரை - ஆயரான புனித அம்புரோசியாரின் மறையுரை மற்றும் தனியாக அவர் இருக்கும் போது விவிலியத்தில் இருந்து அவர் வாசித்த இறைவார்த்தை (உரோமையர் 13:12)

இவை இரண்டும் சேர்த்து அகுஸ்தினாரை புனித அகுஸ்தினாராக மாற்றியது.

அழைத்தல்
• எகிப்தியரின் கொடுமையினின்று இஸ்ரயேல் மக்களை விடுவிக்க கடவுள் மோசேயை தேர்ந்து கொண்டார். மோசேயின் அழைப்பு (வி.ப. 3: 2-6) (வி.ப. 4: 10-17)
• ஆண்டவர் எசாயாவை அழைத்தது. (எசாயா 6: 5-10)
• ஆண்டவர் எரேமியாவை அழைத்தது (எரேமியா 1: 5-10)
• ஆண்டவரின் அழைப்பினால் சவுல் பவுலாக மாறியது

சவுலின் தமஸ்குப் பயணத்தின் காரணம் என்ன?
தலைமைச் சங்கத்தினரால் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட முடியப்பரை சவுலும் சேர்த்து கொலை செய்வதற்கு காரணமானார். எனவே முடியப்பரின் சாவு கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்களுக்கு பெரும் பயமாக மாறியது. சவுல் கிறிஸ்தவர்களை ஆண்களும் பெண்களுமாக கைது செய்து சிறையிலடைத்து சித்திரவதை செய்தார். எனவே கிறிஸ்தவர்கள் சவுலுக்கு அஞ்சி எருசலேம் நகரை விட்டு வெளியேறி தமஸ்கு நகரில் தஞ்சம் புகுந்தனர். இதையறிந்து அவர்களை கைது செய்து மீண்டும சிறையிலடைப்பதற்காக அவர் தமஸ்கு நோக்கி பயணம் மேற்கொண்டார். இந்த நேரத்தில் தான் இயேசு அவரை ஆட்கொண்டார்.

தமஸ்கு அனுபவத்திற்கு பின்

தூய பவுலின் பண்புகள்

1. தூய பவுல் தீவிரமான கொள்கைப் பிடிப்பு உடையவர்
இவரது வாழ்வின் முற்பகுதி கிறிஸ்துவுக்கு எதிரான ஒரு பகுதி, கிறிஸ்துவை தனது மெசியாவாகக் கடவுளாக ஏற்றுக்கொண்ட பின்னர் அவருக்காக தன் உயிரையே கையளிக்கும் அளவுக்கு தீவிரமான கொள்கை பிடிப்பு உடையதாக இருந்தது.

2. ஆழமான ஈடுபாடு
“கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையெனக் கருதுகிறேன்” என்னும் அவருடைய வார்த்தைகள் அவரது ஆழமான ஈடுபாட்டை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. கிறிஸ்துவுக்காக அவர் பட்ட பாடுகள் குறிப்பாக சாட்டையடிகள், கல்லெறிபடல், பசிதாகமுறலும் பட்டினி கிடத்தலும், ஆடையின்றி இருத்தல் போன்ற துன்பங்கள் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிப்பில் அவருக்குள்ள ஆழமான ஈடுபாட்டை நமக்குக் காண்பிக்கிறது.

3. கடின உழைப்பு
பவுல் கடின உழைப்பாளர் என்பதை அவரது வாழ்வு நமக்கு தெளிவுபடுத்துகிறது. “உழைக்காதவன் உண்ணலாகாது” என்ற அவரது கருத்திலிருந்தே அவர் தன்மானமிக்கவர் என்பதை நாம் அறியலாம். பிறரின் உழைப்பை சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதருக்கும் இரு ஒரு பலத்த அடியே என்றும் நாம் கொள்ளலாம். நற்செய்தி அறிவிப்பாளர் என்ற முறையில் அவரது அன்றாடத் தேவைகளை மக்கள் நிறைவேற்ற முன்வந்த போதும் அவர் அதை விரும்பவில்லை. தம் தேவைகளை தாமே நிறைவேற்ற வேண்டும் என்பதில் அவர் உறுதியாயிருந்தார். பிறருடைய உழைப்புக்கும் பொருளுக்கும் ஆசைப்படாத ஒரு தன்மை; பிறர் இரத்தத்தை உறிஞ்சி தான் வாழ வேண்டும் என்று எண்ணாத ஒரு நிலை; ஒரு பொருளாதார நேர்மைத்தன்மை; “உழைக்காதவன் உண்ணலாகாது” என்று சொல்லும் அளவுக்கு உழைப்பிற்கும் உடல் பசிக்கும் முடிச்சு ஏற்படுத்தினார். இந்த செயல்பாடுகள் அனைத்துமே பவுல் ஒரு சிறந்த உடலுழைப்பாளர் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

4. அனைத்தையும் இழத்தல்
கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழப்பதில் இவர் குறியாக இருந்து செயல்பட்டு வந்தார் என்பதனை இவரது கடிதங்களில் பல இடங்களில் நாம் காணலாம். இழப்பதனால் இவர் தாம் அடைவது இலாபமே என்கிறார். ஏனெனில் இழப்பதனால் மட்டுமே கிறிஸ்துவை ஆதாயமாக்க முடியும் என இவர் எண்ணினார். கிறிஸ்துவுக்காக சிலுவையை அல்லது துன்பத்தை ஏற்பதன் மூலம் இவர் கிறிஸ்துவை முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதே இவரது கருத்து.

5. தம்மை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளல்
உலகில் தோன்றிய பலமனிதர்களில் பவுலடியார் வித்தியாசமானவர். அவரது குறைபாடுகள் சிலவற்றை அவரே பிறருக்குமுன் தைரியமாக எடுத்துரைத்துள்ளார். அவை பின்வருமாறு:

அ. உடல் குறை
பார்க்க அழகற்றவர் விகார தோற்றமுடையவர் என்ற குற்றச்சாட்டு

ஆ. குணநலன்களில் குறை
பவுல் ஒரே நேரத்தில் ஆம் என்றும் இல்லை என்றும் சொல்லக்கூடிய குணமுடையர். இதுவும் மக்கள் இவர்மீது வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்று.

இ. பல்வேறு குற்றச்சாட்டுகள்
பவுலடியார் பேச்சாற்றல் இல்லாதவர் என்பதை மக்களே அவருக்குச் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் அவர் தம்மைப்பற்றியே பெருமைப் பாராட்டக்கூடியவர், உண்மையோடும் நேர்மையோடும் நடக்காதவர், பிறரை வஞ்சிப்பவர், சூழ்ச்சிகளால் ஆதாயம் தேடக்கூடியவர், தூய்மையற்ற எண்ணங்களையும், பேராசையும் கொண்டவர் என்று பல்வேறு குற்றச் சாட்டுகளை எதிரிகள் இவர் மீது சுமத்தினர். இவற்றை இவர் தன் ஆளுமை வளர்ச்சியிலிருந்தும், உண்மையிலிருந்தும் நழுவாமல் எதிர்த்து அவர்களை சமாளித்தார்.

ஈ. பிடிவாதக்காரர்
இவர் மிகுந்த பிடிவாதக்காரராக விளங்கினார் என்பதை இவரது திருத்தூது பயணத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். இவரது உடனுழைப்பாளராகிய பர்னபாவுக்கும் இவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தூதுரை பயணத்தில் அவரோடுள்ள தொடர்பை துண்டித்துக் கொண்டார். இந்த செயல்பாடுகள் வழியாக இவர் எத்துணை பிடிவாதக்காரர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

உ. முன்கோபம் கொண்டவர்
தாம் நற்செய்தி அறிவித்த மக்கள் நம்பிக்கையில் தளர்ச்சியுற்றாலோ, பிளவுபட்டாலோ அதனைப் பார்த்துக் கோபம் கொண்டவர். பலவேளைகளில் கோப வார்த்தைகளை மக்கள் மீது அவர் அள்ளி வீசினார் மக்கள் மீது சாப வார்த்தைகளைக் கூட கொட்டினார் என்பதிலிருந்து இவர் மிகுந்த முன்கோபம் உடையவர் என்பதை நாம் அறியலாம்.

 

திருத்தூதர் பவுலின் பார்வையில் சிலுவை சாவு
சிலுவைச் சாவு என்பது மிகக் கொடுமையானது. அது கொள்ளையர்க்கும், நாட்டுத் துரோகம் புரிந்தவர்களுக்கும், புரட்சியில் ஈடுபட்ட அடிமைகளுக்கும் இயேசு வாழ்ந்த காலத்தில் வழங்கப்பட்டது. இயேசுவும் ஒரு அரசியல் குற்றவாளி எனக் குற்றம் சுமத்தப்பட்டு சிலுவை சாவுக்குக் கையளிக்கப்பட்டார். சிலுவையில் அறைந்து கொல்லப்படுவது பழைய ஏற்பாட்டில் ஒரு சாபமாகக் கருதப்பட்டது. “மரத்தில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்” (இச 21:23) சொல்கிறது. எனவே சிலுவையில் தொங்கிய இயேசுவை ஒரு சாபத்தின் சின்னமாக பவுல் முதலில் கருதினார். எனவே அவரை கடுமையாக எதிர்த்தார். பின்பு அவர் இயேசுவால் மனமாற்றம் பெற்றபின் சிலுவையை ஆசியின் சின்னமாக எடுத்துக்கொண்டார். அதை வெற்றியின் சின்னமாகக் கருதினார். எனவே அவர் “ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையேயன்றி வேறெதைப்பற்றியும் ஒரு போதும் பெருமை பாராட்டமாட்டேன்” என்று சொல்லுமளவிற்கு கிறிஸ்துவின் மேல் பற்று கொண்டார். கிறிஸ்துவின் சிலுவைச் சாவு பவுலின் வாழ்க்கையிலே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சிலுவையே அவரது வாழ்வின் மையமாக அமைந்தது. கிறிஸ்துவின் பொருட்டு பவுல் அனுபவித்த சிலுவை துன்பங்களைக் குறித்து அவரே கூறுகிறார். பாடுபட்டு உழைத்தேன் பன்முறை சிறையில் அடைக்கப்பட்டேன் கொடுமையாய் அடிபட்டேன் பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்து முறை யூதர்கள் என்னை சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள் மூன்று முறை தடியால் அடிபட்டேன் ஒருமுறை கல்லால் எறியப்பட்டேன். மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன். ஓர் இரவும் பகலும் ஆழகடலில் அல்லலுற்றேன், பசிதாகமுற்றேன் என்று பல்வேறு கொடுமைகளை அவரே சொல்லியுள்ளார். இருந்தாலும் அனைத்தையும் இயேசுவுக்காக தாங்கினேன் என்றும் சொல்லியுள்ளார். இயேசு சிலுவை மரணத்தினால் நமக்கெதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன் பத்திரத்தை அழித்து நமக்கு ஆசி வழங்கினார் எனவே சிலுவை நமக்கு ஆசி வழங்குகின்றதாகவே எப்போதும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தூய பவுல் கிறிஸ்துவின் நற்செய்திக்காக கொண்ட திருத்தூது பயணங்கள்
இயேசு தமக்குப்பின்னரும் இறையாட்சிப் பணி தொடரவேண்டும் என்பதற்காக பன்னிரு திருத்தூதர்களை தேர்ந்தெடுத்தார். இவர்கள் ஒரிடத்தில் தங்கி இருப்பவர்கள் அல்ல மாறாக அனுப்பப்பட வேண்டியவர்கள் எனவே இயேசு தம் சீடர்களுக்கு திருத்தூதர்கள் அதாவது அனுப்பட வேண்டியவர்கள் என்று பெயரிட்டார். அந்த வரிசையில் தூய பவுல் தானும் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கு இயேசுவால் நேரிடையாக அழைக்கபட்டவர், கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதில் உறுதி கொண்டு நற்செய்தி அறிவிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.

முதல் நற்செய்தி அறிவிப்புப் பயணம்
கி.பி. 47-48 ஆண்டுகளில் பர்னபா, பவுல் மற்றும் மாற்கு ஆகியோர் இப்பயணத்தில் பங்குபெற்றனர். சைப்ரஸ், துருக்கி நாட்டுப் பகுதிகளான அந்தியோக்கியா, இக்கொனியா, லிஸ்திரா, தெருபை ஆகிய நகரங்களில் இவரது பயணம் இருந்தது.

இரண்டாம் நற்செய்தி அறிவிப்புப் பயணம்
கி.பி. 50-52 ஆண்டுகளில் இந்தப்பயணத்தில் பவுல் நீண்ட தூரம் சென்றார். இதில் பயணக்குழு இரண்டாக உடைந்தது. பர்னபா, மாற்கு ஆகியோர் சைப்ரசுக்கும் பவுல் மற்றும் சீலா ஆகியோர் இக்கோனியாவுக்கும், அந்தியோக்கியாவுக்கும் சென்றனர். வழியில் திமொத்தேயு மற்றும் லூக்கா ஆகியோரும் பவுலோடு இணைந்து கொண்டனர். தொடர்ந்து பவுல் மாசிதோனியா மற்றும் அக்காயா, ஏதென்ஸ் மற்றும் கொரிந்து நகரங்களுக்குச் சென்றார்.

மூன்றாம் நற்செய்தி அறிவிப்புப் பயணம்
கி.பி. 52-57 வரை 5 ஆண்டுகள் நீடித்தது. எபேசுதான் இப்பயணத்தின் மையத்தளமாக அமைந்தது.

திருத்தூது பயணத்தின் போது அவர் அனுபவித்த துன்பங்கள்
கால் நடையாகவே செல்ல வேண்டும். பாலங்கள் இல்லை. எனவே ஆறுகள் குறுக்கிட்டால் நீந்த வேண்டும். சாலைகள் இராது. எனவே காடுகளைக் கடக்க வேண்டும். அங்குக் காட்டு விலங்குகளை சந்திக்க வேண்டும். கொள்ளையர்களை எதிர்கொள்ளவேண்டும். வழியில் உணவகங்கள் இராது. எனவே பட்டினி கிடக்க வேண்டும். தங்கும் விடுதி இராது எனவே இரவின் குளிரைத் தாங்கவேண்டும். கடல்வழி சென்றால் நவீன கப்பல்கள் இராது எனவே பழங்கால கப்பல்களில் செல்லவேண்டும். அந்த நேரங்களில் கப்பல்களில் ஏற்படும் பயமான சூழ்நிலைகளான புயல், கடுமையான அலைகள் இவற்றை சமாளிக்க உயிரை பணயம் வைத்துப் பயணிக்க வேண்டும். இவையெல்லாம் தூய பவுல் தனது திருத்தூது பயணத்தின் போது தாம் சந்தித்த துன்பங்களாக கருதுகிறார்.

மொத்தமாக தரைவழியில் அவர் 2122 கி.மீ பயணம் செய்து நற்செய்தி அறிவித்திருக்கின்றார். கடல்வழியாக 755 கி.மீ. எருசலேம் முதல் அந்தியோக்கியா வரை 660 கி.மீ மொத்தம் 3557 கி.மீ. பயணம் செய்து நற்செய்தி அறிவித்துள்ளார். இது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள தூரத்தை விட அதிகமானது. இவ்வளவு தூரத்தையும் தனது இரண்டாவது தூதுரை பயணத்தின் வழியாக இவர் செய்துள்ளார்.

 

Article by
Julibar Euprin Xavier



 


Catechism
Login / Register
Download Question Paper

 

Bible Stories for Children
Short Stories from Holy Bible for Childerens

 

Life History of Mother Teresa
A Brief biography and
history of Mother Teresa

 

Legion of Mary @ Kurusady
Largest apostolic organization
of lay people in the Catholic Church
Google

 

St. Antony's Life History
St Anthony of Padua who was born in a native of Lisbon...

 

Devotion of 13 Tuesdays
Devotion of 13 Tuesdays in honour of St. Anthony

 

Gallery
Photos of St. Anthony Church, Kurusady

 

Bible Stories  |  Mother Terasa  |  Legion of Mary  |  Photo Gallery  |  St. Antony of Padua  |  Catholic Prayers

Lent Message  |  Religious Wallpaper  |  History  |  Diocese  |  Directory  |  Services  |  About Kurusady  |  Institute and Convents  | Contact Us
Last updated on 1 October 2021 All rights reserved © 2000 - 2021 www.kurusady.com john©kurusady.com